புதன், 25 ஜனவரி, 2012

மனித வாழ்க்கையில் 40 முதல் 60 வயது

             



          மனித வாழ்க்கையில் 40 முதல் 60 வயது வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், புற்றுநோய், வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவை இந்த வயதில் பலரையும் தாக்குகின்றன. நோய்த் தடுப்பில் கவனிக்கத்தக்கது 2 விஷயங்கள்.
ஒன்று: மாற்ற முடியாதது.
* வயதாவதை நம்மால் மாற்றவோ, தடுக்கவோ முடியாது. மூப்பு இயல்பானது என்பதால், முதுமைக்கு தக்கபடி உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும். அதனால் ஓரளவு உடல் பாதிப்பு ஏற்படவே செய்யும்.
* சுற்றுப்புறம் மற்றும் சீதோஷ்ணம்.
    சுற்றுப்புற சூழல் என்பது உலகளாவிய தாக்கத்திற்கு உட்பட்டது. நாளுக்கு நாள் சூற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீதோஷ்ண நிலை இயற்கையோடு தொடர்புடையது. இவைகளின் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் ஓரளவு மாற்ற முடியாததாகவே இருக்கிறது.
இரண்டு: மாற்றக் கூடியவை.
    நம்மில் சில மாற்றங்களை நாமே ஏற்படுத்திக்கொண்டால், நோய் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு தகுந்தவைகளை நான்காகப் பிரித்து குறிப்பிடுகிறேன்.
*   இது நாம் நோயின்றி வாழ உணவில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது.
    40-60 வயதுக்கு உள்பட்டவர்கள் தற்போது தினமும் 2500  கலோரி அளவிற்கு உணவு உட்கொள்கிறார்கள். அவர்கள் 1500 கலோரியாக குறைத்துக்கொள்ள வேண்டும். உணவைக் குறைத்தால், உடல் சுமை குறையும். இதற்காக தினமும் உட்கொள்ளும் உணவின் அளவில் 25 சதவீதத்தை குறைக்க வேண்டும். காலையில் 5 இட்லி சாப்பிடுகிறவர்கள், 3 இட்லியாக்குங்கள். அதுபோல் மதிய உணவு, இரவு உணவிலும் அளவைக் குறையுங்கள்.
     நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன் ஆகிய மூன்று வகை சத்துக்கள் இருக்கின்றன. கார்போஹைட்ரேட்டில் இருந்து உடல் தேவையான சர்க்கரையை பெறும். கொழுப்பு சார்ந்த உணவில் இருந்து உடல் கொழுப்பை பெறும். புரோட்டின் உணவில் இருந்து தசை பலத்திற்கு தேவையான சக்தியை உடல் பெறும்.
    கார்போஹைட்ரேட் உணவை நாம் சாப்பிட்டதும் அது ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரையாய் கலந்து, சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோய் வரக்கூடாது எனக் கருதுகிறவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை வெகுவாக குறைக்க வேண்டும்.
  

கார்போஹைட்ரேட் உணவுகளில் சர்க்கரை அளவை சிறிதளவு அதிகரிப்பது, பெருமளவு அதிகரிப்பது என 2 வகைகள் உண்டு. சிறிதளவு அதிகரிப்பதில் கோதுமை, பழவகைகள், பெரும்பாலான காய்கறிகள், பால், பருப்பு வகைகள் இடம் பெறுகின்றன. அரிசி, உருளைக் கிழங்கு, தர்ப்பூசணி, கார்ன் ப்ளாக், குளுகோஸ் போன்ற உணவுப் பொருட்கள் ரத்தத்தில்  பெருமளவு சர்க்கரையின் அளவை அதிகரிப்பதாகும்.
      நார் சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும். மலச்சிக்கல் வராது. புற்று நோய் தாக்குதல் ஏற்படாது. காபி, டீ, குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சுவைக்காகவும், நிறத்திற்காகவும் ‘பாஸ்ட் புட்‘ உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்குகேடு விளைவித்து, நோயை வரவழைக்கின்றன. 40 வயதாகும் போதே உணவில் கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டால், பெரும்பாலான நோய்களில் இருந்து தப்பி விடலாம்.

**   இது நாம் உடற்பயிற்சி மூலம், நோயின்றி வாழ வழி காட்டுகிறது.
   உடலுக்கு உழைப்பு மிக அவசியம். உடலுழைப்பை முறைப்படுத்துவதுதான், உடற்பயிற்சி. குறைந்தது 30 நிமிடங்கள் வாரத்தில் நான்கு நாட்களாவது வேகமாக வியர்வை வரும் அளவிற்கு நடக்க வேண்டும்.
நடக்கும்போது உடல் எடை முழுவதும் கால்களில் தாங்கும். 50&60 வயதில் எல்லோருக்கும் அது ஏற்றதல்ல! அதனால் முழு உடல் எடையும் கால்களில் தாங்காத அளவிற்கு இருந்துகொண்டே செய்யும் சைக்கிளிங் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவை சிறந்தது. யோகா, தியானம், பிரணாயாமம் போன்றவையும் மிக நல்லது. வயதாகும்போது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மை குறையும். யோகா செய்தால், நெகிழ்வுத்தன்மை அதிகரித்து உடல் இயக்கம் சீராகும்.
    நான் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை பரிசோதிக்க செல்லும் போதெல்லாம் அங்கே லிப்டை இயக்குபவர், ரொம்ப அன்போடு ‘சார் லிப்ட்டில் வாங்க சார்.. சீக்கிரம் மேலே போகலாம்‘ என்பார். நான் அவரிடம் சிரித்தபடியே ‘சீக்கிரம் ‘மேலே‘ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் லிப்ட்டை பயன்படுத்தாமல் நடந்தே மாடி ஏறுகிறேன்‘ என்பேன். நாம் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால், நடந்தே மாடிப்படிகளில் ஏறவேண்டும்.
     ஆண்களில் பலர் வீடுகளில் படுத்து, டி.வி. பார்த்துக்கொண்டே ‘அதை எடுத்து வா.. இதை எடுத்துவா..‘ என்று மனைவிக்கு உத்தரவு போடுகிறார்கள். உத்தரவு போடாமல் அவர்களே எழுந்துபோய், அதை எடுத்துக்கொண்டு வந்தால் மனைவியிடம் மரியாதை கிடைக்கும். எழுந்து நடப்பதால் அவர்கள் உடலும் ஆரோக்கியமாகும்.

***  நாம் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் வராது. மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள் அண்டாது.
    எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ளாமல், சீரியசாக எடுத்துக்கொண்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். அந்த மன அழுத்தமே 40 முதல் 60 வயது வரையிலானவர்களை அதிக அளவில் நோயாளிகளாக மாற்றுகிறது.
    மிகச் சிக்கலான விஷயங்களைக்கூட எளிதாக கையாண்டு மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களைக்கூட சமாளிக்கத் தெரியாமல் மன அழுத்தத்திற்குள் அமுங்கிப் போகிறவர்களும் உண்டு. மனிதர்கள் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கும் ஆற்றலை மரபு வழியாகவும், வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாகவும் பெறுகிறார்கள். தாங்கும் சக்தி கொண்டவர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் அதை மன அழுத்தமாக மாற்றிக்கொள்கிறார்கள்.
     சமூக சேவையில் ஆர்வம் கொள்வது, ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது, வருவது வரட்டும் என்று நம்பிக்கையோடு செயல்படுவது போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும். மூத்தோரை மதித்தல், மன்னிக்கும் குணம், அடுத்தவர்களை காயப்படுத்தாமல் பேசுதல், பழிவாங்கும் குணம் இல்லாமை, ஒழுக்கத்தோடு வாழுதல்,  சட்டவிரோத செயல்பாடு இன்மை போன்றவை எல்லாம் மன அழுத்தத்தை தவிர்க்கும் மாமருந்தாகும். 60 வயதை நெருங்கும்போது வாழ்க்கை நெருக்கடியில் இருந்து விலகி, பேரக் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிட்டால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.

****  மது அருந்துதல், சரியான நேரத்திற்கு தூங்காமல் இருத்தல், தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுதல், ஒழுக்கமின்றி வாழ்தல் போன்றவைகளால் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இத்தகைய முரண்பாடான பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருந்தால், அது தொடர்புடைய நோய்கள் நம்மைத் தாக்காது.
   வாழ்க்கை முறை முரண்பாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 40-60 வயதுகளில் மிக அதிகம். எதற்கெடுத்தாலும் விருந்து, விழா என்று அளவுக்கு அதிகமாக பிரச்சினைக்குரிய உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், புகைப் பிடித்தல், செக்ஸ் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் அது தொடர்பான நோய்த் தாக்குதல் எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
நோய் எதுவும் இல்லாவிட்டாலும் மேற்கண்ட பருவத்தில் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவது மிக அவசியம். அதன் மூலம், நோய் எதுவும் இருப்பின் தொடக்கத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற்று சரிசெய்திடலாம்.
40 முதல் 60 வயதுவரையிலான பருவம் வாழ்க்கையில் மிக இன்றியமையாதது. இந்த பருவத்தில் உடலையும், மனதையும் நன்றாக பராமரித்தால் ஆரோக்கியமாக 100 வயது வரை வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக